1701 சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் ரூ.15 கோடி மோசடி
- சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தகவல்.
கிருஷ்ணகிரி,
மாவட்டத்தில் இந்த ஆண்டில் 1701 சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் ரூ.15 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறினார். கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் நேற்று, மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் காந்திமதி முன்னிலை வகித்தார்.
முகாமை தொடங்கி வைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு பேசியதயாவது:-
சைபர் கிரைம் குற்றங்கள்
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சார்பில், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் சைபர் கிரைம் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்திலேயே முதன்முறையாக சைபர் கிரைம் சார்பில் ரத்த தான முகாம் கிருஷ்ணகிரியில் நடைபெறுகிறது.
அறிவியல் வளர்ச்சி மக்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆன்லைனில் புதுப்புது வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பணம் இரட்டிப்பு, செயல்முறை கட்டணம் என பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. இந்த மோசடி கும்பல்களிடமிருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் 1701 புகார்கள் வரபெற்றுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் ஆன்-லைனில் மூலம் ரூ.15 கோடியே 34 லட்சத்து 10 ஆயிரத்து 283-க்கு மோசடி நடந்துள்ளது. இதில் மோசடியில் ஈடுபட்ட நபர்களின் வங்கி கணக்குகள் மூலம் 14 கோடியே 87 லட்சத்து 40 ஆயிரத்து 888 முடக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.33 லட்சத்து 58 ஆயிரத்து 162 பணம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலும் பணத்தை இழந்தவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகும். பொது மக்கள், மோசடி களில் ஏமாறாமல் இருக்க செல்போன் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் போது செயலின் நம்பகத்தன்மை, அதில் சுயவிவரங்களை கொடுக்கலாமா என ஆராய வேண்டும்.
ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிய வேண்டும். ஆன்லைனில், 99 சதவீத நிறுவனங்கள் போலியாக உள்ளன. நாம் செலுத்தும் பணத்திற்கு முதலில் லாபம் தருவது போல் பணம் கொடுத்து, முதலீடு செய்யும் பெரிய தொகையை ஏமாற்றி விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. பான்கார்டு' விவரங்களை பதிவு செய்ய செல்போனுக்கு எந்த வங்கியும் குறுஞ்செய்தி அனுப்புவதில்லை.
அவ்வாறு வருபவை அனைத்தும் போலியானது. ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட வகைகளில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தால், 1930 என்கிற இலவச எண்ணில் புகார் அளிக்கவும். மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரிலும் புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04343 -294755 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு கூறினார்.
இந்த ரத்த தான முகாமில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ரத்த தானம் செய்தனர்.