உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் மின்கம்பம் அகற்றப்படாமல் தார் சாலை அமைப்பு

Published On 2023-04-12 14:26 IST   |   Update On 2023-04-12 14:26:00 IST
  • தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு அந்த பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கியது.
  • ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள வேதாச்சலம் நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு சாலை அமைத்து தரக்கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் வந்தனர்.

இந்த நிலையில் அங்கு தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு அந்த பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கியது. முதற்கட்டமாக அங்கு குறிப்பிட்ட அளவு ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்றது. அப்போது 2 மின்கம்பத்தை அகற்றி சாலை அமைத்திடாமல் மின்கம்பம் நடுவில் இருந்தபடியே சாலை பணியானது நடைபெற்று கடந்த வாரம் முடிந்துள்ளது.

இந்த பணிகளே முடிவுற்று இரண்டு வாரங்கள் ஆகியும் தற்போது வரை மின்கம்பம் அகற்றப்படாமல் சாலையின் நடுவே இருந்து வருகிறது. முறையாக சாலை பணியின்போது மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்கம்பங்களை இடமாற்றம் செய்த பின்னரே சாலை அமைத்திட வேண்டுமெனும் விதிமுறைகள் இருக்கும் நிலையில் இத்தகைய ஒப்பந்ததாரரின் செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே மின்கம்பத்தினை இடம் மாற்றி, மின்கம்பத்தினை இடம் மாற்றிடாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News