பள்ளி-கல்லூரிகளுக்கு ரூ.4.83 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.ஒ எந்திரம்
- ஆர்.ஒ எந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி உதவினார்.
- கல்லூரிகளுக்கு ரூ.68 லட்சம் மதிப்பிலான ஆர்.ஒ எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரி களில் பயிலும் நாளைய இளையத் தலைமுறை யினருக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், சுகாதாரமான குடிநீர் சுத்திகரிப்பு ஆர்.ஒ எந்திரத்தை வழங்கி வருகிறது.
அவ்வகையில் திருப்பத்தூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் இயங்கி வரும் லிட்டில் பிளவர் சிறுவர் இல்லத்தில் தங்கி பயிலும் பெற்றோரை இழந்த மற்றும் சிதைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2,16,957 மதிப்பிலான ஆர்.ஒ எந்திரம் மற்றும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி ரூ.2,66,253 மதிப்பிலான ஆர்.ஒ எந்திரம் என மொத்தம் ரூ.4.83 லட்சம் மதிப்பிலான ஆர்.ஒ எந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி உதவினார்.
ஆர்.ஒ எந்திரத்தை நேரில் சென்று வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இந்த குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் ஆரோக்கியமான உடல் நலத்தோடு கல்வி பயின்று வாழ்வில் மேன்மேலும் உயர்ந்து பெற்றோர்க்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதுவரை ஐ.வி.டி.பி நிறுவனம் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.68 லட்சம் மதிப்பிலான ஆர்.ஒ எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.