சூலூர் அருகே கிராமத்தை சூழ்ந்த புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி
- இந்த கிராமத்தின் நடுவே நீர்வழிப் பாதை அமைந்துள்ளது.
- கண் எரிச்சல் மற்றும் இரைப்பு நோய் ஆகியவை ஏற்படுகிறது.
சூலூர்,
சூலூர் அருகே சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது வெங்கடாபுரம் கிராமம். கிராமத்தின் மேற்குப் பகுதி சின்னியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டதாகவும் கிழக்கு பகுதி நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்டதாகவும் உள்ளது.
இந்த கிராமத்தின் நடுவே நீர்வழிப் பாதை அமைந்துள்ளது. இதில் சின்னியம்பாளையம் ஊராட்சி பணியாளர்கள் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பதால் கடும் புகை ஏற்படுகிறது. இதனால் கிராமம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.
அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் இரைப்பு நோய் ஆகியவை ஏற்படுகிறது. இது பற்றி பலமுறை கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இப்பகுதியில் இரவு கடும் குளிர் சூழ்நிலை நிலவியதால் அங்கு ஏற்பட்ட புகை கிராமத்தில் உள்ள வீடுகளை சூழ்ந்தது. இதனால் மூச்சு விட முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இதனை அடுத்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுக்க குவிந்தனர்.
மேலும் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். நாளை மாவட்ட கலெக்டரை நேரில் சென்று புகார் செய்து விட்டு அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.