உள்ளூர் செய்திகள்

காமாட்சி நகர் பகுதியில் ரேஷன் கடை கட்டுவதற்கான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ரேஷன் கடை கட்டி தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-12-13 14:54 IST   |   Update On 2022-12-13 14:54:00 IST
  • பரமத்தி வேலூர் -மோகனூர் சாலையில் உள்ள காமாட்சி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • ஆக்கிரமிப்பை அகற்றி ரேஷன் கடை கட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் -மோகனூர் சாலையில் உள்ள காமாட்சி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரேஷன் கடைக்கு 2 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள் ரேஷன் கடைக்கு செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நிலம் ஒதுக்கீடு

இதனால் காமாட்சி நகர் பகுதியிலேயே ரேஷன் கடை கட்டுவதற்காக அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த இடத்தில் ரேஷன் கடை கட்டித்தரக் கோரி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தொடர்ந்து சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரிடம் மனு அளித்தும், இதுவரை அப்பகுதியில் ரேஷன் கடை கட்டுவதற்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆக்கிரமிப்பு

இந்த நிலையில் ரேஷன் கடைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து. அப்பகுதி மக்கள், வருவாய் துறையினரிடம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டு, உடனடியாக ரேஷன் கடை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிறயை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் ஆக்கிரமிப்பை அகற்றி ரேஷன் கடை கட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News