மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சாமன்னா நீர் ஏற்று நிலையத்தில் தடுப்புகள் அகற்றம்
- தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படும்.
- மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சாமன்னா நீர் ஏற்று நிலையத்தின் அருகே பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இந்த பணிக்காக தண்ணீரினை அதிகமாக மோட்டார் மூலம் உறுஞ்சி எடுக்க அந்த பகுதியில் பவானி ஆற்றின் நடுவே கற்களை கொண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டது.
இந்த தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படுவதாகவும், மேட்டுப்பாளையம் மக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
எனவே இதனை அகற்ற வேண்டும் என மேட்டுப்பாளையம் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இருப்பினும் அந்த தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் நேற்று அந்த பகுதியை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களும் சென்றனர்.
ஆய்வில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் மட்டுமின்றி அதற்கு கீழ் பகுதியில் உள்ள திட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தடுப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து ஆற்றில் அமைக்கப்பட்ட தடுப்புகள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.