உள்ளூர் செய்திகள்

கூடுதல் விலைக்கு விற்க வாகனங்களில் கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-06-23 09:40 GMT   |   Update On 2022-06-23 09:40 GMT
  • வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் விற்பதற்காக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
  • 2 வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 3.25 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் விற்பதற்காக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.

இதனை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தி வருபவர்களை மடக்கி பிடித்து அவர்களை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் இன்று அதிகாலை கோபிசெட்டிபாளையம் அடுத்த ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 வாகனங்கள் வந்தன. அந்த வாகனங்களை சோதனை செய்தபோது அதில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நம்பியூரை சேர்ந்த பிரசாந்த் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் 2 வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 3.25 டன் (3,250 கிலோ) ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து பிரசாந்த்திடம் குடிமைப் பொருள் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News