கூத்தம்பாக்கம் ஊராட்சியில் திறக்கப்படாத கழிப்பறைகள்
- பொதுமக்கள் அவதி
- கால தாமதமின்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு கூத்தம்பாக்கம் ஊராட்சி உள்ளது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கூத்தம்பாக்கம் காலனி, நரிகுப்பம், வீரராகவபுரம்,அருந்ததி பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்து வதற்காக ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் கடந்த 2020-21-ல் ரூ.5.25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கும், மாற்றுத்திறனாளி மற்றும் ஆண்களுக்கும் சமுதாய சுகாதார கழிப்பறை கட்டப்பட்டது.
பாணாவரத்தில் இருந்து கூத்தம்பாக்கம் செல்லும் சாலையையோட்டி
அமைந்துள்ள இந்த சுகாதார கழிப்பறை கட்டிடத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு வசதியாக சாய்தளப் பாதையுடன், கைபிடி இருக்கைகளுடன் கூடிய சிறப்பு வடிவிலான கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
அரசு நிதியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக வெறும் காட்சிப் பொருளாகாவே சுகாதார வளாகத்தைக் காண்கிறோம்.
இதனால் இப்பகுதி மக்கள் இயற்கை உபாதை களை கழிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக கழிப்பறை திறக்காததால் பெண்கள் தினமும் கடும் அவதிப்படுகின்றனர்.
தயாராக இருக்கும் பொது கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு விடாததால் அரசு நிதிதான் வீணாக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் பயன்பாட்டிற்கு விடாமல் இருப்பதால் முட்புதர்கள் நிறைந்து காடு போல் காட்சியளிக்கிறது.
மேலும் இந்த சுகாதார வளாகத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் பெண்களும், மாற்றுத் திறனாளிகளும் மிகுந்த பயன்பெறுவார்.
எனவே, சீரான தண்ணீர் வசதியுடன் சுகாதார வளாகத்தைத் திறக்க அதிகாரிகள் கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.