உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு விருது வழங்கப்பட்ட காட்சி.

உலக சாதனை நிறுவனத்தின் 2022-ம் ஆண்டு விருதிற்கு ராணிப்பேட்டை கலெக்டர் தேர்வு

Published On 2022-11-14 15:36 IST   |   Update On 2022-11-14 15:36:00 IST
  • இயற்கை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணியினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் முழுக்க 288 கிராமப் பஞ்சாயத்துகள், 8நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் 6 நகராட்சிகளை உள்ளடக்கிய 2,500 சதுர கிலோமீட்டர் விரிவுள்ள இடங்களில் பயணித்து 186.9 டன் (186917.70 கிலோகிராம்) பிளாஸ்டிக் கழிவுகளை 3 மணி நேரத்தில் சேகரித்து சுத்தமான, சுகாதாரமான மாவட்டத்தினை உருவாக்கி "3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு பயணித்து மிக அதிக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த நிகழ்வு" எனும் உலக சாதனை படைக்கப்பட்டது.

முன்பு சுவிட்சர்லாந்து நாட்டில் 3 மணி நேரத்தில் 128.7 டன் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கி படைக்கப்பட்ட உலக சாதனையை முறியடித்த இந்த நிகழ்வில் 96,000கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், கவுன்சிலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அர்பணிப்புடன் ஈடுபட்டார்கள்.

தொடர்ந்து 03-10-2022 அன்று ஒரே நாளில் 5 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் 288 பஞ்சாயத்துகளில் 52,81,647 பனை விதைகளை 880 இடங்களில் நட்டு வைத்து "5 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மிக அதிகமான பனை விதைகள் நடவு செய்த உலக சாதனை" எனும் உலக சாதனை படைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள், குட்டைகள் மற்றும் சாலையோரங்களில் இந்த பனை விதைகளனைத்தும் நடப்பட்டன.3 மாதங்கள் இந்த நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 81,000கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், கவுன்சிலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அர்பணிப்புடன் ஈடுபட்டார்கள்.

இந்த இரண்டு உலக சாதனைகளும் இயற்கை மற்றும் பசுமையைக் காக்கும் விதமாகவும், மனித சமுதாயத்தை உள்ளடக்கிய உலகின் அனைத்து உயிர்களுக்கும் நன்மை விளைவிப்பதாகவும், வருங்கால சந்ததிகளுக்கும் பயனளிக்கும் படி மிகவும் உயர்ந்த நோக்கத்தில் படைக்கப்பட்டுள்தை பாராட்டி எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ரபி பால்பாக்கி, அட்ஜூ கேட்டர் நௌரா அவர்களும் இணைந்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து கெளரவித்தார்கள்.

மேலும், மிக உயரிய நோக்கம் கொண்ட உலக சாதனைகளை உலகிற்கு அடையாளப்படுத்தி கௌரவிப்பதற்கு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் கடமைப்பட்டுள்ளது எனவும், அதனை பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவிக்கையில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய இந்த இரு தொலை நோக்குத் திட்டங்களையும் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் படி நிறைவேற்றுவதே இந்த சாதனைகளின் நோக்கம் என்றார்.

தொடர்ந்து ரபி பால்பாக்கி தெரிவிக்கையில்: 3 வருடங்களுக்கு ஒருமுறை உலக அளவில் "ஐகானிக் விருதுகள்" வழங்குவதை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது.ராணிப்பேட்டை நிர்வாகம் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூன்று மணி நேரத்தில் மிகப்பெரிய பிளாஸ்டிக் சேகரிப்பு இயக்கம் எனும் தலைப்பில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பிரிவில் ஐகானிக் 2022 விருதிற்கு தகுதி பெற்றுள்ளது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.அதற்கு வருகின்ற 2023 ஆம் ஆண்டின் மத்தியில் துபாய் நாட்டில் நடைபெறும் ஐகானிக் விருது விழாவிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு அழைப்பு விடுத்தார்கள்.கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

இயற்கையை பாதுகாத்திடும் வகையில் மாபெரும் இரண்டு உலக சாதனை நிகழ்வுகளை அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து மாவட்டத்தில் மேற்கொண்டோம்.அனைவருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். அனைவரின் ஒத்துழைப்பினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஐகானிக் 2022 உலக விருது தேர்வு செய்தமைக்கு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிகழ்வுகள் சாதனைக்காக மட்டுமே மேற்கொள்ளப்படவில்லை வருங்கால சந்ததியினருக்கு நல்ல சுற்றுச்சூழலை இந்த பூமியில் வழங்கிட அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுமையாக தவிர்க்கவும் மேற்கொ ள்ளப்பட்டது.தொடர்ந்து இது போன்ற இயற்கை பாது காப்பதும் மேம்படுத்துவதும் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் மற்றும் செயற்பொறியாளர், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரபிபால்பாக்கி, அட்ஜீடி கேட்டர் நெளரா ஆகியோர் அழைப்பு விடுத்த போது எடுத்த படம் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், திட்ட இயக்குனர் லோகநாயகி பங்கேற்றனர்.

Tags:    

Similar News