ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய மாணவிக்கு அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறி பள்ளியில் படிக்க உதவி செய்வதாக தெரிவித்த போது எடுத்த படம்
பள்ளி படிப்பை பாதியில் விட்ட சிறுமி மீண்டும் படிக்க அமைச்சர் காந்தி உதவி
- தந்தையை இழந்து வறுமையில் வாடிய குடும்பம்
- சிறுமியின் சகோதரனுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் தெரிவித்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் குடுகுடுப்பைகாரர் சமூகத்தை சேர்ந்த பாபு மற்றும் மல்லிப்பூ தம்பதி வசித்து வந்தனர்.
இவர்களுக்கு பழனி (20) என்ற மகனும், செல்வி (14) என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் சிறிய ஓலை குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் மல்லிப்பூ கணவர் பாபு சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ள நிலையில் மல்லிப்பூ தனது இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுருக்கு பை போன்றவற்றை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் மல்லிப்பூ கால்கள் முறிவு ஏற்பட்டு அவர் தொடர்ந்து வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.
இந்த சூழலில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக இவர்களது மகன் பழனி படிப்பை நிறுத்தி விட்டு குடுகுடுப்பை தொழிலினை மேற்கொண்டு வந்தனர்.
அதில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காக மல்லிப்பூ மகளான செல்வி 9-ஆம் வகுப்பு வரை அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்த நிலையில் தற்போது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை தற்போது நிறுத்திவிட்டு தனது தாயார் மேற்கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுருக்குப்பை வியாபாரத்தினை வீதி வீதியாக தலையில் சுமந்தவாறு நடந்து சென்று விற்பனை செய்வதன் மூலமாக வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு அவர்களது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் அச்சிறுமியின் இல்லத்திற்கு நேரில் சென்று சிறுமியின் தாய்க்கு ஆறுதல் தெரிவித்தார்.மேலும் சிறுமியின் பள்ளி மற்றும் கல்லூரி செலவு முழுவதையும் அமைச்சர் ஆர்.காந்தி தானே ஏற்பதாக உறுதி அளித்தார். மேலும் மல்லிபூவிற்கு உடனடியாக அரசின் சார்பில் இலவச வீடு கட்டி தர ஆணையிட்ட அமைச்சர் உடனடியாக முதியோர் ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட்டார்.மேலும் சிறுமியின் சகோதரன் பழனிக்கு தனியார் தொழிற்சாலையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளை அழைத்த அமைச்சர் மாணவியை இன்றே பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார்.அதன்படி மாணவி சீருடை உடுத்தி மகிழ்ச்சியோடு புளியங்கன்று அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.
இதில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட இலக்கிய அணி சிவஞானம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி, மாவட்ட மாணவரணி எஸ்.வினோத், கோட்டாட்சியர் வினோத் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.