முதலீட்டாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
நிதி நிறுவன ஏஜென்டு வீடு முற்றுகை
- முதலீட்டாளர்கள் காத்திருப்பு போராட்டம்
- போலீசார் பேச்சுவார்த்தை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள தனியார் நிதி நிறுவன ஏஜென்டுக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு முதலீட்டாளர்கள் பூட்டு போட்டு வீட்டை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூரை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டுவந்தது. ஒரு லட்சம் கட்டினால் மாதந்தோறும் 10 முதல் 15 ஆயிரம் வரை வட்டி தரப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டது.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நெமிலி சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோடி கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் நெமிலி பகுதி ஏஜன்டாக ஜெகன்நாதன் என்பவர் நியமிக்கப்பட்டு இவர் மூலமாக மக்கள் பணத்தை கட்டி வந்தனர். திடீரென்று 6 மாதத்திற்கு முன்பு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல் மோசடி செய்ததாக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
நிறுவனத்தின் முக்கிய நிர்வா கிகள் தலைமறை வானதால் பணத்தை திரும்ப தரக்கோரி முதலீட்டாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று நெமிலியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் தனியார் ஏஜென்ட் ஜெகன்நாதனை பணத்தை திருப்பி தரக்கோரி அவருக்கு சொந்தமான நெமிலி ஒச்சேரி சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு பூட்டுபோட்டனர்.
மேலும் நெமிலி பஜார் பகுதியில் உள்ள அவரின் வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் முன்பு பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நெமிலி போலீசார் போராட்டகாரார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதனால் அங்குகு பரபரப்பு ஏற்பட்டது.