உள்ளூர் செய்திகள்

எரிந்த குடிசை வீடு.

பட்டாசு விழுந்து குடிசை வீடு எரிந்து நாசம்

Published On 2022-10-25 15:10 IST   |   Update On 2022-10-25 15:10:00 IST
  • அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்
  • அதிகாரிகள் நிவாரண பொருட்கள் வழங்கினர்

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஜானகி. இவருக்கு கணவர் இல்லாததால் ஜானகி மட்டும் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தீபாவளியையொட்டி அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது பட்டாசு வெடித்து ஜானகியின் குடிசை வீட்டின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் குடிசை வீடு மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்த தண்ணீரை குடிசை வீட்டின் மீது ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த துணிமணிகள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குடிசை வீட்டில் இருந்த ஜானகிக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

Tags:    

Similar News