உள்ளூர் செய்திகள்

பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம்.

பழுதான அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

Published On 2022-07-10 08:53 GMT   |   Update On 2022-07-10 08:53 GMT
  • பழுதான அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • கட்டிடம் முற்றிலுமாக சுவர்கள் விரிசல் விழுந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் ஜன்னல்கள் உடைந்தும், பெயர்த்தும் உள்ளது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செங்காலன் வயல் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 20 குழந்தைகள் பயின்றுவந்தனர்.

இந்த நிலையில் தற்போது கட்டிடம் முற்றிலுமாக சுவர்கள் விரிசல் விழுந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் ஜன்னல்கள் உடைந்தும், பெயர்த்தும் உள்ளது.

இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கட்டிடத்தின் அவல நிலையால் இங்கு கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பயின்று வருகின்றனர். சேதமான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் மிக அருகில் ஆரம்ப பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகள் இப்பகுதியில் தான் விளையாடுகின்றனர். மேலும் இந்த பழுதடைந்த கட்டிடத்தின் அருகே குடிநீர் குழாய் இருப்பதால் குடிநீர் குடங்களில் தண்ணீர் பிடித்துச் செல்லும் பொதுமக்களும், ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகளும் குடிநீர் தேவைக்காக இந்த கட்டிடத்தின் அருகே சென்று வருகின்றனர்.

அதிகாரிகளின் மெத்தனத்தால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

எனவே பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்தபகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News