சாலையில் இரு பக்கமும் சேதமடைந்து ஒரு அடி அளவில் பள்ளம்
- நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் சாலையில் இரு பக்கமும் சேதமடைந்துள்ளது.
- சாலை சீரமைப்பு பணிகளை விரிவாக்க பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்
வேதாளை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.செய்யது அல்லாபிச்சை.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள வேதாளை ஊராட்சி யில் சாலையில் இரு புறங்களும் சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதிகளவில் வாகனங்கள் தினமும் வந்து செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிர் பலிகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையை உடனடியாக சீரமைத்து விரிவாக்கம் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து வேதாளை ஊராட்சி மன்றத்தலைவர் ஜெ.செய்யது அல்லாபிச்சை மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட வலையர் வாடியில் இருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள தார் சாலையின் இரு பக்கமும் அரிப்பு ஏற்பட்டு சுமார் ஒரு அடி வரை பள்ளமாக உள்ளது.
ஒரே நேரத்தில் எதிரெதிரே பஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகளவில் பள்ளி வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின் றன. காலை, மாலை வேளைகளில் இந்த சாலையில் சிரமத்துடன் செல்ல வேண்டி இருக்கிறது.
விரைவில் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக இந்த சாலையை செப்பனிட நெடுஞ்சாலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை சீரமைப்பு பணிகளை விரிவாக்க பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.