உள்ளூர் செய்திகள்

கோவையில் ஓடும் ரெயிலில் தவறி விழுந்த வாலிபரை காப்பாற்றிய ரெயில்வே போலீசார்

Published On 2022-09-23 09:54 GMT   |   Update On 2022-09-23 09:54 GMT
  • ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இங்கு போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
  • ரெயிலுக்கு இடையே சிக்கிய நபரை போலீசார் லாவகமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

கோவை,

கோவை மாநகரில் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ரெயில் நிலையத்திற்கு சென்னை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழக பகுதிகள் மட்டுமின்றி கேரளா, பெங்களூர், மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி ரெயில்கள் வந்து செல்கின்றன.ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இங்கு போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல ரெயில்வே நிலைய குற்றப்பிரிவு ஏட்டு ரமேஷ், மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி ஆகியோர் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 3-ம் எண் நடை மேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் நிலையத்திற்கு வந்ததும் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த ரெயிலில் வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரெயில் மெதுவாக செல்வதை பார்த்ததும், ரெயில் மெதுவாக தானே செல்கிறது. இறங்கி விடுவோம் என நினைத்து இறங்குவதற்கு முற்பட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே இறங்கும் போது அந்த நபர் கால்தடுமாறி, நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே தவறி விழுந்து விட்டார்.இதை அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்களான ரமேஷ், மாரித்து, அருண்ஜித், மினி ஆகியோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் விரைந்து சென்று சக பயணிகள் உதவியோடு ரெயிலுக்கு இடையே சிக்கிய நபரை லாவகமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சிவகுமார் என்பதும் , இவர் வேலை விஷயமாக கேரளாவுக்கு சென்று விட்டு, கோவைக்கு ரெயிலில் வந்ததும் தெரியவந்தது.ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது, தண்டவாளத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் சிக்கிய நபரை தங்களது உயிரையும் துச்சமென மதித்து மீட்ட மீட்டு ரெயில்வே போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News