உள்ளூர் செய்திகள்

பழனி மலைக்கோவிலில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள ரேக்குகள்.

பழனி: பக்தர்களின் மொபைல் போன்களை பாதுகாக்க தயார் நிலையில் ரேக்குகள்

Published On 2023-09-24 12:09 IST   |   Update On 2023-09-24 12:09:00 IST
  • பழனி முருகன் கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
  • அக்.1ந் தேதி முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது

திண்டுக்கல்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோயில் வளாகத்தில் மொபைல் போனில் தங்களை படம் பிடித்து மகிழ்வர். இந்நிலையில் பழனி முருகன் கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

அதில் வருகிற அக்.1ந் தேதி முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது. இந்த உத்தரவை பழனி மட்டுமின்றி அனைத்து கோவில்களிலும் பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி வருகிற அக்-1ந் தேதி முதல் பழனி முருகன் கோவிலுக்குள் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி கோவிலுக்கு தவறுதலாக மொபைல் போன், கேமரா கொண்டு வருபவர்களுக்காக, மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, ரோப்கார் மற்றும் வின்ச் ரயில் நிலையத்தில் உள்ள காலணி பாதுகாப்பு மையத்தில் மொபைல் போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அங்கு மொபைல் போன் வைப்பதற்கான ரேக்குகள், மொபைல் போன் கொடுக்கும் பக்தர்களின் விவரங்களை சேகரிக்க இன்டர்நெட் வசதியுடன் கூடிய இரண்டு கணினிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மொபைல் போனுக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி, பக்தர்கள் தங்கள் மொபைல் போனை ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்து வந்து பெற்று கொள்ளலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News