நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதல்
- புதுக்கோட்டை பகுதி நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்
- கட்டுப்படுத்திட வேளாண்மை துணை இயக்குனர் ஆலோசனை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்திட புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.குலைநோய் தாக்கப்பட்டால், . இலை களின்மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப்பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன்கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும்.இந்நோய் தீவிரமாகத் தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது.குலைநோயைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும்.இந்நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. என்ற மருந்து 200 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி. சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற சிறிய இறக்கைகளைக் கொண்டி ருக்கும். இப்பூச்சியானது நெற்பயிரின் தூர்களில் இருந்துகொண்டு நெற்பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது.
வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் இதன் பாதிப்பு அதிகமாகும். மேலும், நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் வயல் வரப்புகளைத் தூய்மையாக வைத்திருப்பதோடு,நெற்பயிரை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து செம்மை நெல் சாகுபடி முறையில் நட வேண்டும்.அல்லது, எட்டடிக்கு ஓர் அடி இடைவெளியில் பட்டம் விட்டு நடவு செய்ய வேண்டும்.வயலில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும். மேலும், யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை மேலுரமாக இடும்பொழுது பிரித்துப்பிரித்து இட வேண்டும். இவ்வாறு புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.புகையானின் தாக்குதல் அதிகமாகும்பொழுது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மி.லி. அல்லது தையோமீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் அல்லது இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல். 40 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் தூர்ப் பகுதியில் நன்கு படும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.