உள்ளூர் செய்திகள்

நெற் பயிர்களில் ட்ரோன் மூலம் உயிர் உரம் தெளிப்பு

Published On 2022-12-02 09:02 GMT   |   Update On 2022-12-02 09:02 GMT
  • நெற் பயிர்களில் ட்ரோன் மூலம் உயிர் உரம் தெளிக்கப்பட்டது
  • வறட்சியை தடுக்க விவசாயிகள் நடவடிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் பகுதிகளில் நெற்பயிர்களில் வறட்சியைத் தடுக்கும் விதத்தில் தமிழகத்தில் முதல்முறையாக ட்ரோன் தெளிப்பான் மூலம் உயிர் உரம் தெளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்து 800 ஹெக்டர் பரப்பளவு கொண்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகின்ற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் போதிய மழையின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

முதல் தவணை உரம் இட்டு பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த போதிலும் போதிய தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் ஆங்காங்கே கருகத் தொடங்கியுள்ளன. இதனை சரி செய்யும் விதமாக வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை, தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் சார்பில் பயிர்களுக்கு உயிர் உரம் தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.இளஞ்சிவப்பு மெத்தைலோ பாக்டீரியம் எனும் உயிர் உரமானது தெளித்த 15 நாட்கள் வரை தண்ணீர் இன்றி வாடாமல் வளர்ச்சியடையும், அதனைத் தொடர்ந்து மீண்டும் 15 நாட்களுக்கு பிறகு உயிர் உரம் தெளிக்க வேண்டும். உயிர் உரம் தெளிக்கப்படுவதால் வறட்சியிலிருந்து பயிர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முழுக்க முழுக்க துண்ணுயிர்களால் தயாரிக்கப்படும் உரம் என்பதால் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டமாக தமிழகத்தில் முதல் முறையாக மீமிசல் பழங்குளம் பகுதியில் 1200 ஏக்கர் பரப்பளவில் உயிர் உரம் அடிக்க திட்டமிட்டு ட்ரோன் தெளிப்பான் மூலம் உயிர் உரம் தெளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வேளாண்மை அலுவலர் பிரவீனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News