ஆலங்குடி அருகே குளத்தில் வாலிபர் பிணம்
- ஆலங்குடி அருகே குளத்தில் வாலிபர் பிணம் மீட்கபட்டது
- இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
ஆலங்குடி:
ஆலங்குடி-புதுக்கோட்டை சாலையில் தனியார் மஹால் அருகே சாம்பிராணி குளம் உள்ளது. அருகில் இருந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக்ரஜினி மற்றும் இன்ஸ்பெக்டர் அழகம்மை உள்ளிட்ட காவல்துறையினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சடலத்தை மீட்டனர். இதையடுத்து சடலத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் கடந்த பத்து நாட்கள் வரை ஆலங்குடி மற்றும் இதர காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலைக் கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் மக்கள் நடமாட்டமும் நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் நிறைந்த பகுதியில் மிதந்த சடலத்தால் அவர் நீரில் தவறி விழுந்து உயிரிழந்தாரா, இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.