உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-09-27 05:01 GMT   |   Update On 2023-09-27 05:01 GMT
  • தேனி அரசு மருத்துவமனையில் 22 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • தனி கவனம் செலுத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி நகரின் முக்கிய பகுதியாக காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு பைக்கில் வைக்கப்பட்டு இருந்த 9 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதே போல் எஸ்.புரம் அருகே பைக்கில் வந்த மர்ம நபர்கள் சாலையோரம் நின்று பேசிக் கொண்டு இருந்த வாலிபரின் செல்போனை பறித்துச் சென்றனர். இதே போல் சக்கம்பட்டி மெயின் ரோடு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அனுமார் கோவில் அருகே துணிகரமாக செல்போனை தூக்கிச் சென்றனர். இதே போல் ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே கடையின் பூட்டை உடைத்து பைக் திருடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக இருந்த உறவினர்களின் 22 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. பெயரளவுக்கு மட்டும் வழக்கு பதிவு செய்து கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாகி விட்டது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆயுதபூஜை, தீபாவளி என தொடர் பண்டிகைகள் வர உள்ளது. எனவே ஆண்டிபட்டி பகுதியில் மக்கள் கூட்டம் சாலையில் அதிகரிக்கும் எனவே இதில் தனி கவனம் செலுத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News