உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்கு

Published On 2023-04-19 10:05 GMT   |   Update On 2023-04-19 10:05 GMT
  • நீதிபதியிடம் தண்டபாணி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
  • ஊத்தங்கரைக்கு அழைத்து வந்து கடந்த 15-ந் தேதி மகனையும், மருமகளையும் கத்தியால் வெட்டினேன்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதியில் கடந்த 15-ந் தேதி தண்டபாணி என்பவர் காதல் திருமணம் செய்த மகன் சுபாஷ் (வயது25), தடுக்க வந்த தாய் கண்ணம்மாள் (60) ஆகியோரை வெட்டி கொலை செய்தார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா(25) சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மகனையும், தாயையும் கொன்று விட்டு தப்பி ஓடிய தண்டபாணி ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகே தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை தனிப்படை போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தண்டபாணியை கைது செய்தனர். சிகிச்சை பிறகு அவரை நேற்று ஊத்தங்கரை நீதிமன்றத்தில் நீதிபதி அமர் ஆனந்த முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதியிடம் தண்டபாணி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இதில் தனது மகன் காதல் திருமணம் செய்தது தனக்கு பிடிக்காததால் அவர்கள் இருவரையும் திருப்பூரில் இருந்து ஊத்தங்கரைக்கு அழைத்து வந்து கடந்த 15-ந் தேதி மகனையும், மருமகளையும் கத்தியால் வெட்டினேன். அப்போது என்னை தடுக்க வந்த தாய் கண்ணாம்மாளையும் வெட்டினேன். இதில் எனது தாயும்,மகனும் உயிரிழந்தனர். மருமகள் வெட்டுகாயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தண்டபாணி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு மற்றும் இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் அவரை போலீசார் வேனில் அழைத்து சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் நாளை (20-ந் தேதி) சென்னையில் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹால்தர் விசாரணை நடத்த இருக்கிறார்.

Tags:    

Similar News