உள்ளூர் செய்திகள்

மின்கட்டணம் நிலுவையால் தவிக்கும் விசைத்தறியாளர்கள்

Published On 2023-02-10 07:21 GMT   |   Update On 2023-02-10 07:21 GMT
  • விசைத்தறியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் தான் செலுத்த இயலும்.

மங்கலம் :

கடந்த செப்டம்பர் மாதம் மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியது. குறைக்கும் வரை மின் கட்டணத்தை செலுத்துவதில்லை என திருப்பூர் ,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்தனர்.

சமீபத்தில் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 'விசைத்தறிக்கான 750 யூனிட் இலவசம் மின்சாரம் 1000 யூனிட்டாக வழங்கப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார். இது விசைத்தறியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் கடந்த 4 மாதங்களாக விசைத்தறி கூடங்களுக்கான மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்தவில்லை.

அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக கட்டணம் நிலுவையில் இருந்தும் மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் நிலுவையில் உள்ளது.

இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது:- விசைத்தறி கூடம் ஒன்றுக்கு சராசரியாக 20 - 25 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வரும். 6 மாத மின் கட்டணம் நிலுவையில் உள்ளது. இத்துடன் செலுத்தாத தொகைக்கான அபராதமும் ஆயிரக்கணக்கில் வரும் என்பதால் ஒட்டுமொத்தமாக செலுத்துவது கடினம் என்றார்.

சோமனூர் விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி கூறுகையில்,நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் தான் செலுத்த இயலும். இது குறித்து அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

Tags:    

Similar News