உள்ளூர் செய்திகள்

திருப்பூர் குமரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி

Published On 2023-01-11 13:34 IST   |   Update On 2023-01-11 13:34:00 IST
  • தேசிய கொடியை கீழேவிடாமல் கையில் பிடித்தபடி இருந்ததால் கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்டார்.
  • 91-வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் குமரன் நினைவகத்தில் சிலைக்கு பள்ளி மாணவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர்:

ஆங்கிலேயர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி அழைப்பு விடுத்திருந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக திருப்பூரில் 1931-ம் ஆண்டு திருப்பூர் குமரன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தேசிய கொடியினை ஏந்தியபடி ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கியதில் குமரன் கீழே விழுந்த போதும் தேசிய கொடியை மண்ணில் விழாமல் பிடித்தபடி இருந்தார். படுகாயம் அடைந்து உயிரிழந்த போதும் தேசிய கொடியை கீழேவிடாமல் கையில் பிடித்தபடி இருந்ததால் அவர் கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 91 -வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவகத்தில் இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் நீதி மய்யம், இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் என பலர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பள்ளி மாணவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News