உள்ளூர் செய்திகள்

அவிநாசி கோவிலில் உழவாரப்பணி

Published On 2022-12-26 04:46 GMT   |   Update On 2022-12-26 04:46 GMT
  • இறை பணி மன்றம் சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
  • முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோவிலை அடைந்தது.

அவிநாசி : 

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.

கோவிலில் உள் மற்றும் பிரகாரம், கோவில் வளாகம், கொடி மரம் என அனைத்து பகுதிகளிலும் சிவனடியார்கள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். அதன்பின் திருமுறை பாராயணம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக சென்றனர். இதனை, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற சிவனடியார்கள் ஆன்மிகம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இது குறித்து இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் நிறுவனர் கணேசன் கூறியதாவது:- இதுவரை 246 கோவில்களில் 300க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப் பணிகள் மேற்கொண்ட வருகிறோம். கொங்கேழு சிவாலயங்களில் கோவை - பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து துவங்கியுள்ளோம்.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்,வெஞ்ச மாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவ ஸ்தலங்களில் உழவாரப்பணிகள் மேற்கொண்டோம்.

உழவாரப் பணி மேற்கொள்ளும் கோவில்களில் பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடுதல், கூட்டு பிரார்த்தனை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News