உள்ளூர் செய்திகள்

நீலகிரி கக்கநல்லா வனப்பகுதியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

Published On 2023-05-04 09:01 GMT   |   Update On 2023-05-04 09:01 GMT
  • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன.
  • பலமீட்டர் தூரம் வரை சாலை ஓரங்களில் குவிந்து உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட எல்லைகளான பர்லியார், குஞ்சப்பனை சோதனை சாவடிகள், மாநில எல்லையில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் நீலகிரிக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் நகர்பகுதிகளில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக கர்நாடக எல்லையான கக்கநல்லா.சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பலமீட்டர் தூரம் வரை சாலை ஓரங்களில் குவிந்து உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முறையாக சேமித்து வைத்து அப்புறபடுத்தபடாத காரணத்தால் அடர்ந்த வனப்பகுதியில் பல மீட்டர் தூரத்திற்கு பரவலாக குவிந்து கிடக்கின்றன.

இதில் தேங்கும் உணவை ருசிக்க அப்பகுதியில் உள்ள குரங்குகள் குப்பைத் தொட்டியைச் சுற்றி குவிகின்றன. இதேபோல சில சமயங்களில் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் குப்பைத்தொட்டியில் உணவு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என வனவிலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது பற்றி வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கவலைபடுவதாக தெரியவில்லை என சுற்றுசூழல் மற்றும் வன ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News