ஓடும் பஸ்சில் இளம் பெண்ணிடம் 5 பவுன் நகை கொள்ளை
- பெரம்பலூர் நான்கு ரோடு சிலோன் காலனியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மனைவி பூங்கொடி (வயது 37).
- பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வந்தபோது, பூங்கொடி தனது கையில் வைத்திருந்த கட்டைப்பையை பார்த்தபோது, அதன் பக்கவாட்டில் பிளேடால் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் நான்கு ரோடு சிலோன் காலனியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மனைவி பூங்கொடி (வயது 37). இவர் நேற்று தனது உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக செல்லியம்பாளையம் வடக்கு தெருவில் வசித்து வரும் தனது அக்காள் செல்லத்திடம் இருந்து 5 பவுன் நகையை இரவலுக்கு நேற்று முன்தினம் வாங்கி வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று காலை பூங்கொடி நகையை அணிந்து கொண்டு, உறவினர் திருமணத்திற்கு வந்துள்ளார். பின்னர் மாலையில் அந்த நகையை அவரது அக்காள் மகன் ஆனந்த் என்பவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பூங்கொடி பழைய பஸ் நிலையம் அருகே அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளியில் படித்து வரும் தனது மகள்களை அழைத்து வர சென்றபோது, நகையை ஆனந்திடம் கொடுக்க சென்றார். ஆனால் ஆனந்த் வர தாமதமானதால் பூங்கொடி தனது மகள்களுடன் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வேப்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வந்தபோது, பூங்கொடி தனது கையில் வைத்திருந்த கட்டைப்பையை பார்த்தபோது, அதன் பக்கவாட்டில் பிளேடால் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் கட்டைப்பையின் உள்ளே பார்த்த போது, அதில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நகையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.