தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல்
- தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.
- எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரம்பலூர்:
பெரம்பலூா் மாவட்டம், மேலஉசேன் நகரம் கிராமத்தில் ரூ.1.28 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு குடிநீா் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தம் விரைவில் கோரப்பட்டு, அதில் பங்கேற்கும் நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்படும். புதிய பேருந்துகளை விரைந்து அறிமுகப்படுத்த வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதால், அதற்கான நடைமுறைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் தனியாா்மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவா்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இந்த திட்டங்கள் அனைத்தும் தொடரும்.
போக்குவரத்து கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5 ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீா்வு காணப்படும். சென்னையில் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.
தனியாா் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணிகளை நிரப்புவதற்காக கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.