பெரம்பலூரில் சிறப்பு தூய்மைப் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பெரம்பலூர் நகராட்சியில் சிறப்பு தூய்மைப் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா துவக்கி வைத்தார்.
பெரம்பலூர்:
நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் பெரம்பலூர் நகராட்சி முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு தூய்மைப் பணியினை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் நகராட்சி பகுதி முழுவதும் காலை முதல் மாலை வரை 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு, குப்பைகள் கையாள்வது குறித்து
பொதுமக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தவும், "என் நகரம், என் பெருமை", "என் குப்பை என் பொறுப்பு" என்ற விழிப்புணர்வு பயணத்தை கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியினை முழுமையான சுகாதாரமான நகராட்சியாக மாற்றுவதற்காக உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, "என் குப்பை என் பொறுப்பு" என்ற விழிப்புணர்வு வாசனங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து வனத்துறையின் சார்பில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் அருகில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா துவக்கி வைத்தார்.