உள்ளூர் செய்திகள்

தபால்துறை அதிகாரிகள் ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

Published On 2023-03-22 09:09 GMT   |   Update On 2023-03-22 09:09 GMT
  • சேவை குறைபாடு காரணமாக நஷ்டஈடு வழங்க உத்தரவு
  • பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவு

பெரம்பலூர்

 வேப்பந்தட்டை தாலுகா கைகளத்தூர் ராஜவீதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் ஜோதிவேல் (வயது 46). இவர் கடந்த 14.11.2013 அன்று வி.களத்தூரில் உள்ள துணை தபால் நிலையத்தில் ரூ.30 ஆயிரத்திற்கு தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்து அதற்குரிய சான்றிதழ்கள் பெற்றிருந்தார். ஆனால் அந்த சான்றிதழ்களை ஜோதிவேல் தொலைத்துவிட்டார். இதுதொடர்பாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் மனு தந்து, துணை தபால் நிலையத்தில் சேமிப்பு பத்திரத்தின் நகல் சான்றிதழ்கள் பெறும் வகையில் தடையின்மை சான்றிதழ் பெற்றிருந்தார். அதனைக்கொண்டு துணை தபால் நிலையத்தில் ஜோதிவேல் தனது தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான முதிர்வுத்தொகையை வழங்குமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். ஆனால் சேமிப்பு பத்திரங்களின் அசல் சான்றுகள் இருந்தால்தான் முதிர்வுத்தொகையை தரமுடியும் என்று துணை தபால் அதிகாரி தெரிவித்து முதிர்வுத்தொகையை வழங்க மறுத்துவிட்டார்.மேலும் அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தேசிய சேமிப்பு பத்திரத்தை அடமானம் வைத்து கடன் ஏதும் பெறவில்லை என்று சான்றிதழ் வாங்கி வருமாறு கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டார். அதனைத்தொடர்ந்து ஜோதிவேல் அந்த வங்கியில் இருந்து இதுதொடர்பாக சான்றிதழும் வாங்கி துணை தபால் நிலையத்தில் தாக்கல் செய்தார். இருப்பினும் முதிர்வுத்தொகையை ஜோதிவேலுக்கு வழங்காமல் தபால் துறையினர் அலையவிட்டதால், மன உளைச்சல் அடைந்த ஜோதிவேல், ஸ்ரீரங்கம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், பெரம்பலூர் துணை கோட்ட கண்காணிப்பாளர், வி.களத்தூர் துணை தபால் அதிகாரி ஆகிய 3 பேர் மீதும், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 5.4.2021 அன்று வக்கீல் மூலம் வழக்கு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரர் ஜோதிவேலுக்கு முதிர்வுத்தொகையை உடனே வழங்க வேண்டும். சேவை குறைபாடு மற்றும் ஜோதிவேலுவை அலையவிட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரமும் தபால் துறையினர் 3 பேரும் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.



https://www.dailythanthi.com/News/State/postal-authorities-should-pay-rs15-thousand-as-compensation-924935


Tags:    

Similar News