- பெரம்பலூர் அருகே பிளஸ் 2 மாணவர் விபத்தில் பலியானார்
- உடன் சென்ற 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்
பாடாலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ செல்வம். இவரது மகன் பிரசாந்த் (வயது 17)ஆண்டி மடம் கண்டியம் கொல்லை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் (17) புது வெட்டக்குடி தினேஷ் (17) மேல மாத்தூர் கர்ணன்( 17 )ஆகிய 4 பேரும் மேல மாத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை அறிந்த பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தாங்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர். சடைக்கன் பட்டி என்ற பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த மோட்டார் சைக்கிள் அங்கு சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பள்ளி பஸ்ஸின் பின்பக்கம் மோதியது.இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவர் பிரசாந்த் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். பின்னர் திருமுருகன், தினேஷ், கர்ணன் ஆகிய 3 பேரையும் அவர்களின் பெற்றோர்கள் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதிப்பெண் சான்றிதழ் வாங்க சென்ற மாணவன் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.