ரூ.4.90 லட்சம் செலவில் புதிய தெரு விளக்குகள்
- ரூ.4.90 லட்சம் செலவில் புதிய தெரு விளக்குகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது.
- பெரம்பலூர் நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அவரவர் வார்டுகளுக்கு சாலை, குடிநீர், கழிப்பிடம், பொது சுகாதார வளாகம், மழைநீர் வடிகால், புதை சாக்கடை மராமத்து, மின் விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதில் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ரூ.4.90 லட்சம் செலவில் பழுதடைந்த தெரு விளக்குகளுக்கு பதிலாக புதிய தெருவிளக்குகள் அமைத்தல், விரிவாக்கப்பகுதிகளில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொண்டு நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும், நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களை செப்பனிட்டு தகுதி சான்றுகள் பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.