உள்ளூர் செய்திகள்

தனது குழந்தைகளுடன் பக்கத்து வீட்டு சிறுமிகளையும் அழைத்து கொண்டு மாயமான பெண்

Published On 2023-08-08 11:56 IST   |   Update On 2023-08-08 12:00:00 IST
  • கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தைகளுடன் மாயமான பெண் பக்கத்து வீட்டு சிறுமிகளையும் அழைத்து சென்றதால் பரபரப்பு
  • வழக்கு பதிந்த போலீசார் 5 பேரை தேடி வருகின்றனர்

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பொத்தவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அங்கு வேலை செய்த ரேவதி (27) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு கயல்விழி (3), சாதனா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.திருமணத்துக்கு பின் மனைவியை அழைத்து கொண்டு சரத்குமார் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் இங்கு கூலி வேலை செய்து வந்தார். சரியாக வேலை கிடைக்காததால் சென்னைக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மனைவி குழந்தைகள் பொத்த வாசல் கிராமத்தில் வசித்து வந்தனர்.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சரத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. செல்போனில் பேசிய இருவரும் சண்டையிட்டனர்.பின்னர் கடந்த 3ம் தேதி ரேவதி தனது 2 குழந்தைகளுடன் ஊரிலிருந்து மாயமானார்.அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் மகள்கள் ப்ரீத்தா (17) திவ்யா (14) ஆகியோரும் மாயமாகியுள்ளனர். ரேவதி அவர்களை அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் 5 பேரையும் அவர்களின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து சரத்குமார் மற்றும் முருகன் குடும்பத்தினர் குன்னம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது,மாயமான ரேவதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த அந்த சிறுமிகளுடன் நன்கு பழகி வந்துள்ளார். அப்போது இரு தரப்பினரும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் வறுமை மற்றும் பிரச்சனைகளை பகிர்ந்துள்ளனர்.இந்த நிலையில் ரேவதி வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்ததை அறிந்து தாங்களும் கஷ்டப்படுகிறோம். உங்களுடன் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று அந்த சிறுமிகளும் வீட்டை விட்டு ரேவதி உடன் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கணவருடன் ஏற்பட்ட மோதலில் மனைவி பக்கத்து வீட்டு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு மாயமான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News