லெப்பைகுடிகாடு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
- லெப்பைகுடிகாடு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
- கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் ஓம் நமச்சிவாய என பக்தி பரவசமாக கோஷங்களை எழுப்பினர்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள லெப்பைக்குடிக்காட்டில் அமைந்துள்ள செல்வ விநாயகர்,சுப்ரமணியர், பெரியநாயகி அம்பாள் சமேத, மஹாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகளோடு யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து கும்ப பூஜை, சூரிய பூஜை, நான்கு கால யாக வேள்வி பூஜை நிறைவு பெற்ற பிறகு திரவ்யாஹுதியும், அதனையடுத்த பூர்ணாஹீதியும் நடைபெற்றது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து, கயிலாய வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் வேதவிற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன்பு, கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
லப்பைக்குடிகாடு, ஆடுதுறை, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்து, கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் ஓம் நமச்சிவாய என பக்தி பரவசமாக கோஷங்களை எழுப்பினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கு அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டர் தினகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். கோவில் செயல் அலுவலர் கருணாகரன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.