உள்ளூர் செய்திகள்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி

Published On 2022-07-09 14:51 IST   |   Update On 2022-07-09 14:51:00 IST
  • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் :

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்படுவது வழக்கம்.

மேலும் அந்த நாட்களில் மாலை நேரத்தில் கோவிலில் உள்ள தங்கத்தேரை பக்தர்கள் உபயதாரர்களாக கட்டணம் செலுத்தி இழுப்பது வழக்கம். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்கு பிறகு கோவில் திருப்பணிகள், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தேர் இழுக்கப்படாமல் நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி கோவிலுக்கு ஆய்வுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தங்கத்தேரினை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் விரைவில் கோவிலில் தங்கத்தேர் இழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து திருச்சி இணை ஆணையர் செல்வராஜ் வழிகாட்டுதலின் பேரிலும், கோவில் செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலையில் 3 ஆண்டுகள் 10 மாதங்கள் 7 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை கோவில் தங்கத்தேர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்து இழுக்கப்பட்டது.

பக்தர்கள் உபயதாரர்களாக கட்டணம் செலுத்தி தங்கத்தேரினை இழுத்து வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் உற்சவ அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். கோவில் உள்பிரகாரத்தில் ஒரு முறை வலம் வந்து தங்கத்தேர் மீண்டும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இனி கோவில் நடை திறக்கும் நாட்களில் மாலை 6.30 மணியளவில் தங்கத்தேர் இழுக்கப்படும்.

தங்கத்தேரினை இழுத்து வழிபட பக்தர்கள் ரூ.1,000 கட்டணத்தை கோவில் நிர்வாகத்தில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் காலை, மதியம் அம்மனுக்கு நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News