விதைப்பரிசோதனை நிலையத்தில் இயக்குநர் ஆய்வு
- விதைப்பரிசோதனை நிலையத்தில் இயக்குநர் ஆய்வு செய்தார்
- 118 விதை மாதிரிகள் தரமற்றவை
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் சென்னை விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குநர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூரில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் திடிரென சென்னை விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குநர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள், பணி விதை மாதிரிகள் ஆகியவையின் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலவன் ஆகியவை கணக்கிடப்படும் முறை மற்றும் பரிசோதனை முடிவுகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் விதை முளைப்புத்திறன் அறையில் முளைப்புத்திறன், கணக்கிடும் முறைகள் மற்றும் மறு பரிசோதனை மாதிரிகள் குறித்தும், விதை பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். விதை மாதிரிகளை சரியான முறையில் பகுப்பாய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் முடிவுகள் கிடைக்க செய்யுமாறு இயக்குநர் அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் விதைப் பரிசோதனை நிலையத்தில் நடப்பாண்டு இதுவரை 492 சான்று விதை மாதிரிகள், ஆயிரத்து 21 ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் 273 பணி விதை மாதிரிகள் என மொத்தம் ஆயிரத்து 776 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்து முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 118 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன என்று திருச்சி விதைப்பரிசோதனை அலுவலர் மனோன்மணி தெரிவித்தார்.
ஆய்வின்போது, கரூர் விதை ஆய்வு துணை இயக்குநர் மாயக்கண்ணன், பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.