பிரத்யேக வசதியுடன் கால்நடைகளுக்கு அவசர கால ஊர்தி வழங்க நடவடிக்கை
- பிரத்யேக வசதியுடன் கால்நடைகளுக்கு அவசர கால ஊர்தி வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது
- கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள நமையூர் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை அமைச்சர் சிவசங்கர், மற்றும் பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் நடைபெற்ற விழாவில், கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் நிறுவனம், பால்வளத்துறை மற்றும் கிருஷி கால்நடை தீவன நிறுவனம் மூலம் 100 விவசாயிகளுக்கு இலவசமாக இடுபொருட்கள், பால் வளத்துறை சார்பில் முருக்கன்குடி பால் உற்பத்தியாளர்கள் கடன் சங்கத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் 15 பேருக்கு கறவை மாடு வாங்குவதற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகள், கூத்தூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய சங்கத்திற்கு பதிவு சான்றிதழையும் வழங்கினார்.
பின்னர் விழாவில் அமைச்சர் பேசுகையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 100 மாடுகளுக்கு ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பரிசோதனையின் அடிப்படையில் சினையூட்டும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு என்று பிரத்யேக வசதியுடன் கூடிய அவசர கால ஊர்தி இங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வாகனம் என 4 எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கான அவசர ஊர்தி வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார். முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், வேப்பூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் செல்வராணி வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், ஒகளூர் அன்பழகன்,ஒகளூர் பால்பண்ணை செயலாளர் சக்திவேல், நமையூர் பால்பண்ணை செயலாளர் லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் பெரு கருப்பையா, ஆண்டாள் குடியரசு, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்