உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் 70 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்

Published On 2023-08-05 08:18 GMT   |   Update On 2023-08-05 08:18 GMT
  • பெரம்பலூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 70 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது
  • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான வளாகம், குடியிருப்பு மற்றும் மைதானம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீசார் குடியிருக்கும் வீடுகளின் பின்புறம் மற்றும் அருகே உள்ள பகுதியில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு முடிவடையாமல் நிலுவையில் உள்ளதால், அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வந்தன. மேலும் வாகனங்களை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் காணப்பட்டன. இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் யு, வி பிளாக்குகள் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் நேற்று மதியம் 12.45 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் தீ மள, மளவென பரவி இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் கரும்புகை வெளியேறியதால் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகம் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை கண்ட குடியிருப்பில் வசிப்பவர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி இருசக்கர வாகனங்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் 70 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகி எலும்புக்கூடாக காட்சியளித்தன.

Tags:    

Similar News