உள்ளூர் செய்திகள்

ஆடித் திருவிழா நடத்த ஊராட்சி தலைவரின் கணவர் இடையூறு.. காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

Published On 2023-07-25 21:07 IST   |   Update On 2023-07-25 21:07:00 IST
  • இது எங்கள் ஆட்சி, எனக்குத்தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என கூறி கலாட்டா செய்ததாக புகார்.
  • சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரின் கணவரை அழைத்து பேசுவதாக போலீசார் கூறி உள்ளனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கொமக்கம்பேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்நிலையில், இந்த கோவிலை மணி குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக பராமரித்து வருகின்றனர். மேலும், இக்கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மணி குடும்பத்தினருக்கு முதல் மரியாதையும் கிராம மக்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி இக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேஸ்வரியின் கணவரும், திமுக பிரமுகருமான தங்கராஜ் பிரச்சனை கிளப்பியுள்ளார். 'இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக எனது மனைவி பதவி வகித்து வருகிறார். மேலும், தமிழகத்தில் எங்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. எனவே, எனது குடும்பத்தின் சார்பில் தான் முதல் பூஜையும், எனக்குத்தான் முதல் மரியாதையும் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் திருவிழாவை நிறுத்த வேண்டும்' என்று கூறி கலாட்டா செய்தாராம்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பக்தர்களும், பொதுமக்களும் தங்கராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மணி குடும்பத்தினர் திருவிழா அமைதியாக நடைபெற வேண்டும் என்றும் எனவே அனைவரும் அமைதியாக இருங்கள், தற்போது ஆடிப்பூரத் திருவிழா பிரச்சனை இன்றி சுமூகமாக நடக்கட்டும் என்று ஊர்பொதுமக்களிடமும், அங்கிருந்த பக்தர்களிடமும் வேண்டுகோள் விடுத்தனர். இதன் அடிப்படையில் தங்கராஜ் குடும்பத்தினர் முதல் பூஜை செய்து மரியாதையைப் பெற்றுக்கொண்டனர்.

இனி ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை (06.08.2023) அன்று இக்கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நேற்று கிராம மக்களும், மணி குடும்பத்தினரும் செய்து வந்தனர். அப்பொழுது அங்கு வந்த தங்கராஜ், கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் எனக்குத் தான் முதல் மரியாதை வழங்க வேண்டும். இனிமேல் கோவில் நிர்வாகத்தை ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்களும், பக்தர்களும் உடனடியாக ஊர் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்திற்கு வருமாறு தங்கராஜ்க்கு மணி குடும்பத்தினரும், கிராம மக்களும் அழைப்பு விடுத்தனர். ஆனால், தங்கராஜ் ஊர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறி புறக்கணித்து விட்டார். கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை எனது அறிவுரையின் படி நடத்த வேண்டும். இல்லை என்றால் பிரச்சனை நடைபெறும் என்று தங்கராஜ் கூறினாராம்.

இதனால் இன்று மதியம் கிராம மக்கள் மணியின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கூழ் ஊற்றும் நிகழ்ச்சி பிரச்சனை இன்றி நடைபெறவும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி வெங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கூழ் ஊற்றும் திருவிழா நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் மனு ஒன்றையும் காவல் நிலையத்தில் அளித்தனர். எனவே, போலீசார் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரின் கணவரை அழைத்து பேசுவதாகவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர். இதனை அடுத்து கிராம மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Similar News