உள்ளூர் செய்திகள்

முலாம்பழங்களை இலவசமாக பறித்து செல்லும் மக்கள்

Published On 2022-08-12 15:24 IST   |   Update On 2022-08-12 15:24:00 IST
  • வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஒரு டன் முலாம்பழத்தை 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொள்முதல் செய்து கொள்வர்.
  • தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் வியாபாரிகள் வாங்கிச் செல்ல வரு வதில்லை.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே குறிச்சி, கருங்கரடு, சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் முலாம்பழம் பயிரிட்டுள்ளனர்.

குருவரெட்டியூர் அடுத்து ள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தில் முலாம்பழம் விலை வீழ்ச்சியால் வயலில் அழுகும் நிலையில் பொதுமக்கள் பறித்து சென்றனர்.

தண்ணீர் பந்தல்பாளையத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் தனது வயலில் 1½ ஏக்கர் முலாம்பழம் பயிரிட்டுள்ளார். 50 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும் முலாம்பழம் கடந்த ஒரு வாரமாக விலை கேட்க ஆள் இல்லாததால் வயலில் அழுகி வருகிறது.

இது குறித்து விவசாயி சுதாகர் கூறியதாவது:-

கடந்த ஜூன் மாதம் எனது வயலில் முலாம்பழம் பயிரிடத் தொடங்கினேன். 50 நாட்களுக்கு பிறகு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வியாபாரிகள் யாரும் விலை கேட்க வரவில்லை. வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஒரு டன் முலாம்பழத்தை 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொள்முதல் செய்து கொள்வர்.

ஆனால் தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் வியாபாரிகள் வாங்கிச் செல்ல வரு வதில்லை. இப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் உள்ளூர் வியாபாரிகளும் விலை கேட்க முன்வருவதில்லை.

ஈரோடு மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றால் முலாம்பழம் விலை வீழ்ச்சியால் ஒரு டன் 4 ஆயிரம் வரை விலை போகிறது. இது போக்குவரத்து செலவுக்கு மட்டுமே சரி ஆகி விடுகிறது.

இதனால் ஒரு வாரமாக அறுவடை செய்யாமல் செடியிலேயே முலாம்பழம் அழுகி வருகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முலாம்பழத்தை இலவசமாகவே பறித்துச் செல்ல விட்டுவிட்டேன்.

இதற்காக ரூ80 ஆயிரம் வரை உரம், ஆள் கூலி என முதலீடு செய்துள்ளேன். ஏக்கருக்கு 12 டன் வரை முலாம்பழத்தை அறுவடை செய்யலாம். முறையாக விற்பனை ஆகி இருந்தால் 50 நாளில் கூடுதலாக 70 ஆயிரம் வரை கிடைத்திருக்கும். விலை வீழ்ச்சியின் காரணமாக வியாபாரிகள் வராததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News