உள்ளூர் செய்திகள்

நகர்பகுதியில் கூட்டமாக உலா வந்த காட்டெருமைகள்.

கொடைக்கானல் நகரில் மீண்டும் உலா வரும் காட்டெருமைகளால் மக்கள் பீதி

Published On 2022-12-21 05:11 GMT   |   Update On 2022-12-21 05:11 GMT
  • கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள வனங்களிலிருந்து அவ்வப்போது காட்டெருமைகள் நகர் பகுதிக்குள் உலாவருவது வாடிக்கையாகும்.
  • முன்பு காட்டெருமை தெருவில் வந்தால் ஓரமாக சென்ற நபர்கள் தற்போது தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள வனங்களிலிருந்து அவ்வப்போது காட்டெருமைகள் நகர் பகுதிக்குள் உலாவருவது வாடிக்கையாகும். நகர்ப்பகுதியின் ஒரு சில இடங்களில் புகுந்துள்ள காட்டெருமைகள் அங்கேயே நிரந்தரமாக முகாமிட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது.

இதேபோல் சமீப காலமாக நகர் பகுதிக்குள் அமைதியாக உலா வந்த காட்டெருமைகள் அவ்வப்போது வாகனங்களின் மீதும்,நடந்து செல்வோர் மீதும் மோதி உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. நகர் பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தற்காலிக பணியாளர்களை நியமித்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினர் அவ்வப்போது நகர் பகுதியின் ஒரு சில இடங்களில் புகும் காட்டெருமைகளை கண்டறிந்து வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனர்.இருப்பினும் உகார்தேநகர் பகுதியில் திடீரென்று கூட்டமாக காட்டெருமைகள் உலா வந்தது.

இதனால் பொதுமக்கள் மற்றும் அவ் வழியாக வந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.நகர் பகுதியின் ஒரு சில இடங்களில் காட்டெருமைகள் புகுவதை வனத்துறையினர் எவ்வாறு தடுத்து நிறுத்தினாலும் எங்காவது ஒரு பகுதியில் இருந்து காட்டெருமைகள் புகுந்து விடுகின்றன.

நிரந்தரமாக வனப் பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்குள் நுழையும் காட்டெருமைகளை முழுமையாக அகற்ற நகரின் பல்வேறு பகுதிகளில் கூடுதலாக வனத்துறை பணியாளர்களை நியமித்து அச்சத்தை போக்க வேண்டும். முன்பு காட்டெருமை தெருவில் வந்தால் ஓரமாக சென்ற நபர்கள் தற்போது தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News