உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்- வீட்டில் இருந்தபடி தபால் மூலம் சமர்பிக்க ஏற்பாடு

Published On 2022-06-25 18:35 GMT   |   Update On 2022-06-25 18:35 GMT
  • வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து கடந்த 2 வருடம் விலக்கு அளிக்கப்பட்டது.
  • வயது முதிர்வு காரணமாக நேரில் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.

மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை, அவர்களது வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க சென்னை நகர மண்டல அஞ்சல்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து ஓய்வூதியதாரர்களுக்கு மாநில அரசு விலக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டு மாநில அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 7,15,761 பேர் வருகிற ஜூலை முதல் செப்டம்பர் மாதம்வரை தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக நேரில் சென்று இந்த சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாத ஓய்வூதியதாரர்களுக்கு ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, தபால்காரரிடம் ரூ.70 ரொக்கமாக செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால், உடனடியாக டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் என சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News