உள்ளூர் செய்திகள்

திருவையாறு தாலுகா ஆபீசில் பைபாஸ் நில எடுப்பு சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்தது.

புறவழிச்சாலை அமைக்க நில எடுப்பு தொடர்பாக விவசாயிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை

Published On 2022-11-19 09:23 GMT   |   Update On 2022-11-19 09:23 GMT
  • திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.
  • நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

திருவையாறு:

திருவையாறு புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக நில எடுப்பு செய்யப்பட்டுள்ள கீழத்திருப்பூந்துருத்தி, கண்டியூர் கிராம விவசாயிகள் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள், சப்இன்ஸ்பெக்டர்கள் ரேணுகா, செந்தில்குமார், நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர், வருவாய் ஆய்வாளர் மற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதி கீழத்திருப்பூந்துருத்தி சுகுமார் தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் விவசாய சங்க பிரதிநிதி சுகுமார் பேசும்போது திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.

மேலும் நில எடுப்புக்கு நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

வட்டாட்சியர் பேசும்போது நில எடுப்பு சட்டத்தின்படியே நிலத்திற்கான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வழங்கிட இயலும் என தெரிவிக்கப்பட்டது.

சுகுமாறன் தலைமையில் கலந்துகொண்ட விவசாயிகள் நில எடுப்பு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்பில் உள்ள நில எடுப்பு செய்த உத்தரவின் நகல் தேவை என்றும், அதன் பின்னரே விவசாயிகள் தரப்பில் உரிய முடிவு எடுத்திட இயலும் என்று தெரிவித்தனர்.

வட்டாட்சியர் வருவாய் கோட்ட அலுவலரிடம் கலந்துபேசி இதற்கான முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவித்து. எதிர்வரும் 23-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News