உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஓட்டை உடைசலான பஸ் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் அதிருப்தி

Published On 2022-12-15 12:39 IST   |   Update On 2022-12-15 12:39:00 IST
  • பழுதான பஸ்சை மீண்டும் இயக்கியதால் அதிருப்தி அடைந்த அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • டிரைவரால் இயக்க தகுதியில்லாத பஸ் என கூறப்பட்ட பஸ்சை மீண்டும் பயணிகள் போக்குவரத்துக்கு கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குள்ளனம்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் முருகேசன். இவர் லோயர்கேம்ப் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சை ஓட்டிவந்தார்.

கனமழை பெய்ததால் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து பயணிகளை திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இறக்கிவிட்டு பஸ்சுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

பஸ் மிகவும் பழுதான நிலையில் உள்ளதால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என அவர் கோரிக்ைக விடுத்தார். இதனைதொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

நத்தத்தை சேர்ந்த மாட்டு வியாபாரிகள் கணேசன், ஆறுமுகம், அருணகிரி ஆகியோர் செம்பட்டிக்கு மாடு வாங்க சந்தைக்கு சென்றனர். அப்போது திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்ட பஸ் நின்றிருந்ததை பார்த்தனர். பழுதான பஸ்சை மீண்டும் இயக்கியதால் அதிருப்தி அடைந்த அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் உயிருடன் விளையாடுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், டிரைவர் புகார் அளித்தபின்னர் சம்பந்தப்பட்ட பஸ்சை பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் பஸ் இயக்கப்படும் நிலையில் உள்ளது. மழை பெய்தால் மட்டும் தண்ணீர் ஒழுகும் நிைல உள்ளது. இருந்தபோதும் இயக்கலாம் என தெரிவித்ததால் மீண்டும் பஸ்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.

ஆனால் இதை ஏற்கமறுத்த பயணிகள் கூறுகையில், திண்டுக்கல் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசலாகவே காணப்படுகிறது. அதிலும் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களை பராமரிப்பதே இல்லை. சீட்டுகள் கிழந்த நிலையில் மேற்கூரையும் சேதமடைந்து காணப்படுவதால் மழை காலங்களில் குடையுடனே பஸ்சில் செல்லும் அவல நிலை உள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இந்த நிலையில் டிரைவரால் இயக்க தகுதியில்லாத பஸ் என கூறப்பட்ட பஸ்சை மீண்டும் பயணிகள் போக்குவரத்துக்கு கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

Tags:    

Similar News