உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே காதல் திருமண விவகாரத்தில் பஞ்சாயத்து செய்த 2 பேர் கைது

Published On 2022-10-28 12:48 IST   |   Update On 2022-10-28 12:48:00 IST
  • ராமின் தாய் லட்சுமி, கிராம பஞ்சாயத்தார் மீது மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
  • நெடுஞ்சாலையில் சாலை மறியலால் இரு புறமும் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மதுரா பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் வரத ராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் சங்கீதா பிரியா. இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ராம் என்பவரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் செய்துள்ளார்.

அலைபாயுதே பட பாணியில் இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். மேலும் செல்போனில் இருவரும் பேசியதால் 3 மாதத்திற்கு பிறகு பெண்ணின் பெற்றோருக்கு திருமணம் செய்தது தெரிய வந்தது.

இதனால் இரு வீட்டாரிடம் சமாதானம் பேச பெண்ணின் பெற்றோர் கிராம பஞ்சாயத்தார் வெங்கடேசன் மற்றும் சங்கர் ஆகியோரை அணுகி உள்ளனர்.

இதனை அறிந்த ராம் மற்றும் சங்கீதா பிரியா இருவரும் வீட்டிற்கு தெரியாமல் மீண்டும் ஓட்டம் பிடித்தனர். இதனால் ராம் பெற்றோரை கிராம பஞ்சாயத்தார் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

ஆனால் பேச்சு வார்த்தைக்கு வராமல் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமனின் தாய் லட்சுமியிடம் பஞ்சாயத்தார் சென்று கேட்டுள்ளனர்.

இதுபற்றி ராமின் தாய் லட்சுமி, கிராம பஞ்சாயத்தார் மீது மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து பஞ்சாயத்தார் வெங்கடேசன் மற்றும் சங்கர் ஆகியோரை இன்று அதிகாலை 3 மணி அளவில் போலீசார் கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை பட்டரை பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலால் இரு புறமும் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News