உள்ளூர் செய்திகள்

குடும்பத்துடன் குளத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய கிராம மக்கள்

Published On 2025-09-20 10:51 IST   |   Update On 2025-09-20 10:51:00 IST
  • குடிநீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
  • பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குளத்திற்குள் குடியிருக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பொய்கை ஊராட்சியில் கள்ளம்புளி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு கருப்பாநதி அணையில் இருந்து பாப்பான் கால்வாயில் 13-ம் எண் மடை வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அந்த குளம் நிரம்பிய பின்னர் அருகில் உள்ள குலையனேரி குளத்திற்கு தண்ணீர் செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த கள்ளம்புளி குளத்தை நம்பி சுமார் 48 ஏக்கர் நஞ்சை, 500 ஏக்கர் புஞ்சை நிலங்கள் பலனடைந்து வருகிறது. மேலும் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமும் இந்த குளத்தில் வரும் தண்ணீரால் பெறப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த குளத்திற்கு 1 பங்கு தண்ணீரும், அதன் கீழ் உள்ள குலையநேரி குளத்திற்கு 2 பங்கு நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளம்புளி குளம் நிரம்புவதற்குள்ளாகவே மழை நின்று விடுவதால் குலையநேரி குளத்திற்கு தண்ணீரே வருவதில்லை என அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து அவர்களது 10 ஆண்டு போராட்டத்திற்கு பலனாக சமீபத்தில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பாப்பான்கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் கள்ளம்புளி குளத்திற்கு நுழைவு பகுதியில் வரும்போது அதில் 2 பங்கு தண்ணீரை பைப் மூலமாக குலையநேரி குளத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த வாரம் கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குளத்திற்குள் குடியிருக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர். உடனே போலீஸ் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அப்போது பைப் லைன் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் எனவும், குடிநீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனாலும் இந்த திட்டம் பணிகள் நடைபெற்று இன்று அமலுக்கு வர இருந்ததை அறிந்த பொய்கை கிராம மக்கள் இன்று காலை குளத்திற்குள் குடியேறி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். தங்கள் குளத்தில் நீர் நிரம்பிய பின்னரே குலையநேரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் கூறி சமையல் செய்வதற்கும் உபகரணங்களோடு வந்து குளத்தில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News