உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வன அலுவலர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே நஞ்சராயன்குளம் சரணாலயத்துக்குள் செல்ல வேண்டும். - கலெக்டர் அறிவிப்பு

Published On 2023-07-03 03:45 GMT   |   Update On 2023-07-03 03:45 GMT
  • நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூரிலுள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் 311 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி தாலுகா எல்லையில் அமைந்துள்ளது. நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சரணாலய பகுதிக்குள் வந்துசெல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொது பணியாளர், சரணாலய எல்லையில் வன அலுவலர்களிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே சரணாலயத்துக்குள் செல்ல வேண்டும். சட்டவிதிகளின்படி எல்லை குறிகளை அழிக்கவோ மாற்றவோ கூடாது, வன உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது.

சரணாலயத்தில் இருந்து அகற்றப்படும் பொருட்களை, சுற்றுப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம். வணிக நோக்கத்தில் பயன்படுத்தக்கூடாது. சரணாலயத்துக்கு தீ வைக்க கூடாது. எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் எவ்வித ஆயுதத்துடனும் பிரவேசிக்க கூடாது.

தீங்கு விளைவிக்கும் வெடி மருந்து, ஆபத்தான ரசாயனங்களை உள்ளே எடுத்துவரக்கூடாது. தேசிய வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல், சரணாலயத்துக்குள் வணிக சுற்றுலா, ஓட்டல், லாட்ஜ் கட்ட முடியாது.தலைமை வன உயிரின காப்பாளர், வன உயிரினங்கள் நலனுக்கு ஏற்ப சரணாலயத்தை ஒழுங்குபடுத்தலாம். கட்டுப்படுத்தலாம்,தேவையெனில் தடை செய்யலாம்.

சரணாலயம் அறிவிக்கப்பட்ட 3 மாதத்துக்குள், 10 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் நபர்கள் ஆயுத உரிமம் வைத்திருந்தாலும், ஆயுதங்கள் வைத்திருந்தாலும், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

தலைமை வன உயிரின காப்பாளர் முன் அனுமதியின்றி, சரணாலயத்தை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவில் வசிப்பவருக்கு புதிய உரிமம் எதுவும் வழங்கப்படாது. ஆக்கிரமிப்பு இருந்தால் அவர்களை வெளியேற்றலாம்.

அத்துமீறி எடுத்துவரும் பொருட்கள், கருவிகளை பறிமுதல் செய்யலாம். பாதிக்கப்பட்டவருக்கு இதுகுறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News