உள்ளூர் செய்திகள்

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டதையும், சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதையும் படத்தில் காணலாம்.

தேய்பிறை அஷ்டமியையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-03-16 15:04 IST   |   Update On 2023-03-16 15:04:00 IST
  • 1,008 கிலோ மிளகாய் மூலம் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.
  • பகல், 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

அதிகாலை முதல் 108 வகையான நறுமண பொருட்கள், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் பழங்களால் சாமி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகள், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. மேலும் உபகார பூஜைகள் செய்யப்பட்டன.

இதையொட்டி காலபைரவர் ராஜ அலங்காரத்தில் பக்த ர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.

இந்த சிறப்பு பூஜையில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அவர்கள் பூசணியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு கோவிலில் 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் மூலம் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.

பின்னர் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய த்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.



Tags:    

Similar News