உள்ளூர் செய்திகள்

சாணார்பட்டி மகளிர் காவல் நிலையம்

சாணார்பட்டி மகளிர் போலீஸ் நிலையம் திறந்தும் பயனில்லை

Published On 2022-06-25 07:43 GMT   |   Update On 2022-06-25 07:43 GMT
  • பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்க 30 கி.மீ தூரம் சென்று புகார் கொடுக்கவேண்டிய நிலை உள்ளது.
  • கூடுதல் போலீசார் பணியமர்த்த வேண்டும் மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி, நத்தம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டு ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்க வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுவந்தனர்.

இப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளதால் குழந்தை திருமணங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. எனவே இதற்காக புகார் அளிக்க 30 கி.மீ பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் இதனால் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் செயல்பட்ட பழைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு அங்கு மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 16-ந்தேதி சாணார்பட்டி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

வழக்கமாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 9 பெண் போலீசார் பணியில் இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு பொறுப்பு இன்ஸ்பெக்டர், ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 பெண் போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். ேமலும் கணினி இல்லாததால் அதற்கான ரசீது வழங்கமுடியவில்லை. இதனை பெற வடமதுரை மற்றும் திண்டுக்கல் போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும் சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்திலும் ரசீது மட்டும் கொடுத்துவிட்டு அனைத்து மகளிர் போலீசார் அதற்கான விசாரணையில் ஈடுபடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் மற்றும் ேபாலீசார் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. திண்டுக்கல் தாலுகா, தாடிக்கொம்பு, சாணார்பட்டி, நத்தம், அம்பாத்துரை, சின்னாளபட்டி ஆகிய போலீஸ் சரகங்களை உள்ளடக்கிய இந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் மனுக்களை விசாரிக்க அலைக்கழிக்கப்படுவதால் போலீஸ் நிலையம் திறந்தும் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே இங்கு போதுமான போலீசார் பணியமர்த்த வேண்டும் மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News