இடையக்கோட்டை நங்காஞ்சியாறு நீர்தேக்கம் நிரம்பி உள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே தொடர் மழையால் நிரம்பிய நங்காஞ்சியாறு நீர்தேக்கம்
- தற்போது இடையக்கோட்டை நங்காஞ்சியாறு நீர்தேக்கத்திற்கு விநாடிக்கு 20 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் 2615 ஏக்கர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 3635 ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே நீர்தேக்கம் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாச்சலூர் மலைப்பகுதியில் பெய்த மழையால் வடகாடு கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போது இடையக்கோட்டை நங்காஞ்சியாறு நீர்தேக்கத்திற்கு விநாடிக்கு 20 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
முழுக்கொள்ளளவான 39.37 அடியை எட்டி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கரூர் அமராவதி ஆற்றில் சென்று கலக்கிறது. மேலும் வலது மற்றும் இடது கால்வாய் மூலம் தலா 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பாசனத்திற்கு செல்கிறது.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2615 ஏக்கர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 3635 ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.