விவசாய பூச்சியியல் வல்லுநர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த காட்சி.
திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தென்னங்கன்றுகள், தென்னை மரங்களை பாதிக்கும் புதுவகை நோய்
- தென்னை மரங்களில் புதுவகையான ஒரு நோய் தாக்கப்பட்டு குருத்துகள் அழுகி காய்ப்பு இல்லாமல் போவதோடு புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளில் இந்த நோய் தாக்கி குருத்துகள் வளராமல் கன்று அழுகிப்போகிறது.
- இந்த நோய் பரவி தென்னை விவசாயம் பாதிக்கப்படுமோ என அஞ்சிய விவசாயி நடேசன் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது கொல்லபட்டி பகுதியில் விவசாயி நடேசன் என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களில் புதுவகையான ஒரு நோய் தாக்கப்பட்டு குருத்துகள் அழுகி காய்ப்பு இல்லாமல் போவதோடு புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளில் இந்த நோய் தாக்கி குருத்துகள் வளராமல் கன்று அழுகிப் போகிறது. இந்த நோய் பரவி தென்னை விவசாயம் பாதிக்கப் படுமோ என அஞ்சிய விவசாயி நடேசன் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து திருச்செங்கோடு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் லோகநாதன், திருச்செங்கோடு வேளாண்மை அலுவலர் பவித்ரா மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நோயியல் துறை இணை பேராசிரியர் மருதாசலம், சேலம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியில் துறை இணைப்பேராசிரியர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் நடேசன் தோட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து சேலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் ரவி மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக இணை பேராசிரியர் மருதாசலம் ஆகியோர் கூறியதாவது:-
கன்றுகள் நடும்போது காண்டாமிருக வண்டுகள் குறித்து சுமார் 3 வருடங்கள் கவனமாக இருக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்காமல் இருக்க குறுமணல் வேப்பங்கொட்டை ஆகியவற்றை இணைத்து அரைத்து குருத்துகளில் தூவ வேண்டும் அல்லது நாத்தாலியின் உருண்டைகளை குருத்துகளில் போட்டு வைத்தால் காண்டாமிருக வண்டிகள் தாக்காது. இந்த வண்டுகள் குப்பை, குழிகள் எரு குழிகள், கம்போஸ்ட் யார்டுகள், உள்ள பகுதிகளில் அதிகமாக உற்பத்தியாகும். இதனை தடுக்க மெட்ராரைசியம் அனி சோபில் பேட் என்ற பூஞ்சானத்தை ஊற்றினால் காண்டாமிருக வண்டுகள் புழுக்கள் பருவத்திலேயே அழிக்கப்படும். இதனால் வண்டுகளில் உற்பத்திகள் குறைந்து விடும், அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் காண்டாமிருக வண்டுகளின் உற்பத்தியை குறைக்க முடியும்.
இந்த பூஞ்சான்கள் நெட்டை மர தென்னைகளில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அதிகமாக தாக்காது. ஆனால் நெட்டை மர வகை கன்றுகளை அதிகமாக தாக்கும் ஆகவே மூன்று ஆண்டுகள் கன்று பருவத்தில் இதனை கண்காணிக்க வேண்டும். கன்றுகளை நடும்போது நீர் பாய்ச்சும் போது மண்கள் குருத்துகளில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் ஆகிய மழைக்காலங்களில் தான் இந்த பூஞ்சான்கள் பரவும் காப்பர் ஆக்சிட் மருந்துகளை லிட்டருக்கு 3 கிராம் கலந்து தெளித்தால் இந்த பூஞ்சான்கள் வளராது. போட்டோ கலவை ஒரு சதவீத அளவுக்கு நாமே உற்பத்தி செய்து தெளித்து வந்தாலும் வளராது. காண்டாமிருக வண்டுகளால் ஏற்படும் குழிகள் காயங்களில் தான் இந்த பூஞ்சான் பரவும்.
இது குருத்து அழுகல், பூஞ்சான் நோய் எனப்படும் வழக்கமான குறுத்தழுகள் நோய் போல் அல்லாமல் இது மாறுபட்டு இருக்கும். பாதிக்கப்பட்ட குருத்துகளை பிடுங்கி நெருப்பு வைத்து எரித்து விட வேண்டும். இல்லை என்றால் இது காற்றில் பரவக்கூடியது பல மரங்களையும் பாதிக்கும். இதனால் காய்ப்பு இருக்காது கன்றுகள் குருத்துகள் அழிந்து போகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.